Sunday 10 February 2013

சர்ப்பம்

காசியில் வாழ்ந்த செல்வந்தனின் அருமை மகளாகப் பிறந்தவள் அவனது தாய். மிகவும் எழில் வாய்ந்தவள். பருவமடைந்த அவ்வெழில் நங்கை கங்கையில் குளிக்கச் சென்றாள். அவளது அழகில் மயங்கியது மக்கள் மட்டுமல்ல. ஒரு சர்ப்பம் கூட! அவளைப் பின்தொடர்ந்தது. பயந்து ஓடினாள் நங்கை. ஆனால் அந்த சர்ப்பம் ஆண் உருக்கொண்டு அவளை பலாத்காரமாகப் பற்றி இன்பம் துய்த்தது. கருவுற்றாள் அப்பெண். அறிந்த பெற்றோர்கள் அவளை வீட்டை விட்டு துரத்தினர். அவ்வபலைப் பெண்ணுக்கு புகலிடம் அளித்தான் ஒரு வயதான கிழவன். அங்கு அவள் ஒரு ஆண் மகவை ஈன்றாள். குயவன் மகனாக வளர்ந்தான் குழந்தை. ஏழு ஆண்டுகள் நிறைந்தன.
தில்லியின் அரசன் காசிமீது படையெடுத்து ஏராளமான கப்பம் அளிக்க வேண்டும் என்று காசி மன்னனை அச்சுறுத்தினான். செய்வதறியாது ஆலோசனை நடத்தினான் மன்னன். அப்பொழுது கலயங்கள் கொடுக்க வந்த அச்சிறுவன் போரிடுவதே சிறந்தது எனக் கூறினான். அன்றுமாலை விளையாட்டாக காட்டுக்குள் சென்றவன் இருளில் சிக்கி கொண்டான். திரும்பவழி தெரியாத திகைத்தது ஒருபுறம். மறுபுறம் தம்மன்னனை போரிடச் சொல்லிவிட்டு தான் ஏதும் செய்ய முடியாது போய்விட்டதே என்ற ஏக்கம் வேறு! சிறுவனாதலால் "ஓ" வென்று கதறினான். சிவபெருமானும் பார்வதியும் அவன் முன் தோன்றினர். அவன் திரும்புவதற்கு வழிகாட்டி ஒருவரமும் அளித்தனர். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் மண் பொம்மைகள் மீது விபூதியைத் தூவினால் ஒன்று ஆயிரம் வீரராக மாறி அவனுக்கு உதவுவர் என்று கூறினர். ஒன்றில் மட்டும் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மண்ணில் இருந்து தோன்றியவர்கள் ஆதலால் நீரில் இறங்கினால் கரைந்து விடுவர் என்று கூறி சிவபெருமான் தேவியுடன் மறைந்தார். மறுநாள் சாலிவாஹனன் தனது மண் பொம்மைகளை வீரர்களாக மாற்றி தனது அரசனுக்காக தில்லி அரசனுடன் போரிட்டான். தில்லிப்படை தோற்று ஓடி நர்மதையின் கரையை தாண்டியது. வெற்றிப் பெருமிதத்தில் என்ன செய்கிறோம் என்று எண்ணாமல் தன் படையை ஆற்றில் இறக்கினான் சாலிவாஹனன். முடிவு! அவனது வீரர்கள் ஆற்றில் கரைந்து போயினர். காசிக்குத் திரும்பினான். காசிமன்னன் அவனது உதவியை மெச்சி அவனை பதல்கார் பகுதியின் அரசனாக்கினான். சாலிவாஹனன் நர்மதைக் கரையில் உள்ள பைரவ கட்டடத்துக்கு மீண்டும் வந்து நன்றி பெருக்கோடு சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்தான்.
இது சரித்திரம் அல்ல கதை. நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் ஜபல்பூரிலிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராகாட் என்ற இடத்தில் உள்ள ஒரு விசித்ரமான கோயிலைக் காணச் சென்றபோது அந்தக் கோயிலாப் பற்றி மக்கள் கூறிய கதைதான் இது. இதை அவர் குறித்து வைத்துள்ளார்.
இங்குள்ள கோயில் இப்பொழுது உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. மற்ற கோயில்களைக் காட்டிலும் மாறுபட்டது. வட்டமான மண்டலம் போல் ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 64 பெண் தேவதைகளின் உருவங்கள் உள்ளன. இந்தப் பெண் தெய்வங்களை யோகினிகள் என்பர். ஆதலால் இக்கோயிலை 64 யோகினிகளின் கோயில்கள் என்று "சௌளஷட் யோகினி மந்திர்" என்று அழைக்கிறார்கள். இது போன்ற யோகினி கோயில்கள் இந்தியாவிலேயே 5 கோயில்கள் தான் இருந்ததாக தெரிய வருகிறது. இங்கு வழிபாடு வாமாசார வழியில் ரகசியமாக நடைபெறும். இந்த மண்டலத்தில் நடுவே ஒரு ஆலயம் இருந்தது. அதில் வைரவக் கடவுள் வைரவியுடன் இருந்திருக்கக் கூடும். இந்தக் கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் இராஜராஜன் தஞ்சாவூரில் பெரியகோயிலைக் கட்டுவதற்கு ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்பொழுது இந்தப் பகுதியை கலசூரி வம்சத்து அரசர் ஆண்டார். தமிழ்நாட்டில் சோழர், பாண்டியன், பல்லவர் போல மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக கலசூரி அரசர்கள் கி.பி. 850 லிருந்து 1350 வரை 500 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இக்கோயிலை போற்றியிருக்கிறார்கள்.
இங்கு வாமமார்க்கத்தில் வழிபாடு நடைபெற்றது என்று கூறினேன். வாமமார்க்கம் என்றால் தேவியை முழுமுதல் கடவுகளாகக் கொண்டு வழிபடுவது. இதையே சாக்த வழிபாடு என்பர். இந்த வாமமார்க்கத்தை கௌளலமார்க்கம் என்றும் கூறுவர். லலிதா திரிபுரசுந்தரியை போற்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியை 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுகிறாள்; 64 கலைகளின் உருவமாகத் திகழ்பவள்; 64 கோடி யோகினி கணங்களால் ஸேவிக்கப்படுபவள் என்று
சதுஷ் ஷஷ்டி உபசாராட்யா
சதுஷ் ஷஷ்டி கலா மயீ
மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகீனி கண ஸேவிதா

என்றும் கூறுகிறது. யோகினிகள் என்ற பெண் தேவதைகள் தேவியை உபாஸிக்கும் தேவதைகள். இவர்கள் எப்பொழுதும் கூட்டமாக ஒரு வட்டமாக கைகோத்து செல்வர். ஆடிப் பாடிக் கொண்டிருப்பார்கள். ஆகாயமார்க்கமாகச் செல்லும் இவர்கள் பயங்கரமான சக்தி வாய்ந்தவர்கள். எதிரிகளை சின்னாபின்னமாக மிகவும் கொடூரமாக அழித்து விடுவர். ஆயினும் தமது அன்பர்களை அன்னை போல காத்தளிக்க வல்லவர்கள். 64 வகையான கலைவடிவில் நீ திகழ்கிறாய் என்று திரிபுரசுந்தரியை லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுவதிலிருந்து, 64 யோகினிகள் என்ற உருவங்கள் கலைகளின் அம்சங்கள் என்று தெரிய வருகிறது. ஒப்பற்ற முனிவர்களின் மனத்தில் ஒவ்வொரு கலையும் ஒரு தேவதையாக உருவகிக்கப்பட்டு வழிபடப் பட்டிருக்கக் கூடும். இத்தேவதை வழிபாட்டில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ரகசியமாக மது, மத்ஸ்யம், மாம்சம், முத்திரை, மைதுனம் என்னும் பஞ்சமகாரங்களால் உபாசிப்பது. மற்றொன்று இவை அனைத்தையும் துறந்து யோகமார்க்கத்தில் மனத்திலே பராசக்தியை ஆவஹித்து, அவளுக்கு துணையாக 64 யோகினிகளை அங்கங்களில் ஆவஹித்து, யோகியாகி, ஞானியாகி மலர்தலாகும். இவ்விரு மார்க்கங்களில் ஞானயோக மார்க்கமே சிறந்தது என்பது இவ்வழிபாட்டின் உண்மை தத்துவம்.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் உள்ள யோகினிகளின் சிற்ப உருவங்கள் கலை வரலாற்றில் மிகச் சிறந்த இடம் பெறுகின்றன. எழிலான உடற்கட்டும், வெவ்வேறு நிலைகளும், வாஹனங்களும், யோகியரும், முனிவர்களும் கரம் கூப்பி வணங்கும் பாங்கும், அருள் ததும்பும் முகங்களும் உடையவையாக இவை திகழ்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வடித்தெடுக்கபட்ட இவை கடைந்தெடுத்த அழகு என்பார்களே அப்படித் திகழ்கின்றன. அதனால் தான் இவற்றின் அழகை உலகம் முழுவதும் புகழ்கின்றன. இவற்றில் பல சிற்பங்களின் அடியில் அந்தந்த யோகினிகளின் பெயர்கள் எழதப் பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, மண்டோதரி, அஜிதா, ஆனந்தா, இந்திரஜாலி, என்றெல்லாம் பெயர்கள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினியாகிய துர்க்கை "தெரம்சா" என்று அழைக்கப்படுகிறாள். திரி அம்பா என்பதின் திரிபாக இது தோன்றுகிறது. இந்த யோகினிகளின் உருவைத் தவிர ஸப்தமாதாக்கள், நடனமாடும் நிருத்த கணபதி முதலிய உருவங்களும் உள்ளன. கங்கை, யமுனை, ஸரஸ்வதி, நர்மதை ஆகிய நதி தெய்வங்களும் இங்குள்ளன.
நர்மதை ஆற்றங்கரையில் மனதுக்கு இன்பமான ஒரு பளிங்கு குன்றை தேர்ந்தெடுத்து அதன் உச்சியில் இந்தக் கோயிலை கட்டியிருக்கிறார்கள். சாக்த வழிபாட்டில் மிகச் சிறந்த கோயிலாகத் திகழந்த இந்தக் கோயிலை அது தோன்றி 200 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1155 ம் ஆண்டில் கலசூரி அரசன் நரசிம்மன் என்பவனின் தாய் அல்லன தேவி என்பவள் திருப்பணிசெய்து இந்த மண்டலத்தின் நடுவில் பைரவருக்கு பதிலாக உமையொருபாகனாக சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்தாள். அதை கௌளரீசங்கர் என்று வணங்குகிறார்கள். வாமமார்க்கம் மறைந்து சைவக் கோயிலாக அதுமாறிய போதினும், யோகினிகளின் வழிபாடு தொடர்ந்தது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வந்தானய்யா பாவிகள்! வேறு சமயத்தான். இந்த வழிபாட்டைப் பாராட்ட வேண்டாம். இதன் கலையாவது ரஸிக்கக் கூடாதா ஒரு சிற்பம் விடாது காலையோ கையையோ மூக்கையோ உடைச்சே தீர்த்தான். அவ்வளவு வெறி! இந்த பின்னமான நிலையில் கூட இவை எவ்வளவு எழில் சிற்பங்களாக பொலிகின்றன பாருங்கள்.
யோகினிகளுக்கென்று தனித்தன்மை வாய்ந்ததாக கட்டப்பட்ட கோயில் "பேராகாட்" சௌளஷட்யோகனி கோயில். ஒன்று சொல்ல மறந்து விட்டனே! தமிழ் நாட்டில் இது போன்ற கோயில் இருந்ததா? கோயம்பத்தூருக்கு அருகில் வட்டமான யோகினி கோயில் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக குறித்துள்ளார்கள். அது எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சியம், தமிழ்நாட்டிலும் யோகினிகளை போற்றியிருக்கிறார்கள். தக்கயாகப்பரணி என்னும் நூலில் ஒட்டகூத்தர் யோகினிகளை குறித்துள்ளார்.
அடையாளமுளரித் தலைவி ஆதிமடவார்
உடைய திருவகம்படியில் யோகினிகளே

என்றும் இன்னும் பலவாகப் பாடியுள்ளார். காஞ்சீபுரத்துக்கு அருகில் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் இது போன்ற ஒரு கோயில் 8ம் நூற்றாண்டில் இருந்தது. அதை அலங்கரித்த சிற்பங்களை சுமார் 70ம் ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். பாரீஸ், லண்டன், நியூயார்க் என பல மியூசியங்களில் இவை உள்ளன.
தேவியைத்தான் எத்தனை கோலங்களில் உருவகித்து கற்பித்து தாயாகப் போற்றியுள்ளது இந்த பாரத புண்ணிய பூமி! காண்பதெல்லாம் தெய்வம். செயலனைத்தும் அதன் வழிபாடு என உணர்ந்து வழிபட்ட ஞானபூமி இது.

No comments:

Post a Comment